கொல்கத்தா (முன்பு கல்கத்தா) இந்திய மாநிலமான மேற்கு வங்கத்தின் தலைநகரும், பரப்பளவில் இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய நகரமும் ஆகும். இந்நகர் கிழக்கு இந்தியாவின் கலாச்சாரம், கல்வி மற்றும் வர்த்தக நடுவமாக விளங்குகிறது. இந்நகர் இந்தியாவின் கிழக்கு பகுதியில் பாயும் ஊக்லி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. கொல்கத்தா நகரின் புற நகர் பகுதிகளையும் கணக்கில் கொண்டால் இந்நகரின் மக்கள் தொகை சுமார் 1.5 கோடி ஆகும். எனவே, இந்நகர் இந்தியாவின் மூன்றாவது அதிக மக்கள்தொகை கொண்ட நகராக கருதப்படுகிறது. மேலும், இந்நகர் உலக அளவில் பரப்பளவில் எட்டாவது மிகப் பெரிய நகருமாகும் .